
25 September 2025
சீனாவின் ஓநாய் இராஜதந்திரத்தில் வந்துள்ள மாற்றங்கள்
ஓநாய் போர் தந்திரம் அல்லது இராஜதந்திரம் (wolf warrior diplomacy) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்றாகும். இந்த இராஜதந்திரம் ஒரு வலுவான தேசியவாதத்தை (muscular nationalism) வற்புறுத்துகின்றது. மேலும் தற்போதைய உலகளாவிய ஒழுங்கைக் (global order) குறித்து வெளிப்படுத்துவதாகவும் இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்த உலகளாவிய ஒழுங்கமைவு மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை, பொருளாதார வளர்ச்சி முதலானவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றது. இவற்றை சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்க இயலவில்லை என்பதையே வெளிக்காட்டுகின்றது. மேலும் தனக்குரிய அரசியல், பொருளாதார பாதைகளை வகுத்துக் கொண்டு அதன் மூலம் வெற்றி பெறவே விரும்புகின்றது.
சீன அரசாங்கத்தின் தூதர்கள் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போன்றே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வார்கள் என்ற அனுமானம் தவறானது. கரடுமுரடான நடைபோக்கு என்றதை தாண்டி ஓநாய் இராஜதந்திரம் அயல்நாட்டு அரசாங்கங்களை சுரண்டுவதுடன் விட்டுவிடாமல் அந்நாடுகளுடன் இராஜாங்க உறவுகளை வேறு தளங்களில் நீட்டிக்கவும் முனைகின்றது. இதில் கவனிக்கத்தக்க ஒன்று, உலக நாடுகளுக்கு எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும், எங்கு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றது. இது பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலையும் பெருத்திருக்கும். இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட உலக நாடுகளுடன் ஏற்படுத்தும் இராஜாங்க உறவுகளையும் அவற்றுடன் ஏற்படும் சிக்கல்களையும் தன் சொந்த நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்றது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சீனாவின் ஓநாய் இராஜதந்திரம் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது அல்ல, மாறாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப மாறுவதாகும். சான்றாக பொருளாதாரம் மிக்க நாடுகளுடன் ஒரு வகையான உறவையும், பொருளாதாரம் குறைந்த நாடுகளுடன் வேறு வகையான உறவையும் ஏற்படுத்திக் கொள்ளும். அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் இராஜாங்க உறவுகளைக் உதாரணமாகக் கூறலாம்.
அமெரிக்க அணுகுமுறை
மார்ச் மாத தொடக்கத்தில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஃபெண்டைனில் (fentanyl) பிரச்சினையாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது, ‘அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருள்கள் மீதான வரிவிதிப்பு ஒரு சாக்குபோக்கான செயலாகும்’ அமெரிக்கா தனக்குத்தானே ‘ஃபெண்டைனில் பிரச்சினையைக் கொண்டுள்ளது’ என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் ‘மனிதநேயம் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு உதவ நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்றும் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து எக்சில், ‘யாருடைய மிரட்டல்களும் எங்களை பயமுறுத்தாது; எங்களை வஞ்சிக்க நினைக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; மேலும் அழுத்தம் கொடுப்பதும், தேவையில்லாமல் வற்புறுத்துவதும் எங்களைக் கையாள்வதற்கான சரியான வழி அல்ல; எங்கள் மீது அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுக்கும் யாரும் புரிந்து கொள்ளவேண்டியது சரியான நபரின் மீது தவறான ஆயுதத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதைத்தான்’ இவ்வாறு சீன வெளியுறவு அமைச்சகம் எக்சில் பதிவு செய்தது.
அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் எக்சில் மேலும் பதிவிட்டதாவது, ‘அமெரிக்கா விரும்புவது வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எத்தகைய வடிவத்திலான போராக இருந்தாலும் சரி, நாங்கள் இறுதிவரை போராடத் தயாராக இருக்கிறோம்’ என்று பதிவு செய்தது. சீனா என்ன நினைத்துக் கொண்டதோ தெரியவில்லை, அடுத்த ஒரு மணி நேரத்தில் பின்வருமாறு பதிவு செய்தது, ‘அமெரிக்கா உண்மையிலேயே ஃபெண்டைனில் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், இருவரும் சமமாக அமர்ந்து சுமூகமாக பேசிக் கொண்டாலே போதுமானது’ என்று சற்றே அச்சுறுத்தலைத் தவிர்த்த மென்மையான போக்கில் கருத்தை பதிவிட்டிருந்தது.
பெய்ஜிங் அமெரிக்காவுக்கு இணையாக செயல்படவேண்டும் என்று நினைப்பதுடன் மேற்கத்திய மற்றும் உலகப் பொருளாதாரத்துடன் ஈடு கொடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருதுகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுத்த வேகத்தைவிடவும் இரண்டாவதாக பதிலளித்த வேகம் அதிகம். என்றாலும் அமெரிக்கா விதித்த வரிகளைவிடவும் சீனா குறைவாகவே வரிகளையும் விதித்தது. சீனா அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டுவதுடன் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதையும் தன்னுடைய சொந்த நாட்டு மக்களுக்கும் உலகத்துக்கும் தெளிவுப்படுத்துவதில் சிரமப்படுவதாகவும் தெரிகிறது.
அமெரிக்க நட்பு நாடுகளுக்கான மற்றொரு அணுகுமுறை
ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் உக்ரைன்–ரஷ்யா போர் பதட்டங்களுக்கு இடையில் பாதுகாப்புக்கான செலவினங்களைக் குறித்து கருதிக் கொண்டிருக்கும் நிலையில் ஐரோப்பாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக முக்கிய ஓநாய் போராளியான லூ ஷியை சீனா நியமித்தது. பிரான்சில் தூதுவராக தன்னுடைய ஐந்தாண்டுகால நிர்வாகத்தில் லூ பிரான்சின் கோவிட் இறப்பு குறித்து பல தவறான தகவல்களைக் கொடுத்திருந்தது பல சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. அவர் 2023-ஆம் ஆண்டு சோவியத் நாடுகளுக்கு ‘சார்வதேச சட்டத்தில் முக்கியமான அதிகாரம் இல்லை’ என்ற அவருடைய கருத்தும் விவாதத்திற்குள்ளானது. இதற்கு சீன அரசாங்கம் இத்தகையவை லூவின் சொந்த கருத்துக்கள் என்று கூறி நிராகரித்தது. ஆனால் இப்போது அவரையே நியமித்து இருப்பது உக்ரைனின் இறுதி தலைவிதியை குறித்து சீனாவுக்குள்ள அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் மீதான ஐரோப்பிய விருப்பமின்மையும், அமெரிக்க ஜனாதிபதியின் கணிக்க முடியாத செயல்களும் அரசியல், பொருளாதார இடையகங்களை உருவாக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும் நிலையில் லூவின் நியமனம் பொருட்படத்தப்பட வேண்டியதில்லை என்று சீனா உணர்த்துகின்றது. மேலும் இந்த நியமனம் ஐரோப்பிய ஒன்றியத்தைவிடவும் மேலான நிலையில் தாங்கள் இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளைவிடவும் மேலானது என்பதையும் தன்னுடைய நாட்டு மக்களுக்கு தெரிவிக்க உதவுவதாக கருதுகின்றது.
“தொலைதூர உறவினர்களைவிடவும் நெருங்கிய நண்பர்கள் மேலானவர்கள்” (close neighbours are better than relatives far away) என்ற கூற்றை முன்னிலைப்படுத்தி சீனா ஜப்பான் உறவை மேம்படுத்த முனைகின்றது. ஜப்பானிய பிரதமராக ஷின்ஷோ அபே பதவி விலகியதிலிருந்து உறவை வலியுறத்த முயற்சி செய்கின்றது. பல வகையில் ஜப்பான் மீது சீனா அழுத்தம் செலுத்துகிறது - புகுஷிமா பேரழிவைத் தொடர்ந்து ஜப்பானின் கடல் மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க மறுத்துவிட்டது ஒர் உதாரணம்.
இவ்வாறான சூழ்நிலையிலும் ஜப்பானை வீழ்த்த வழக்கமான தந்திரம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் பங்களிப்பைக் குறித்த தொடர்ச்சியான குறிப்புகள் ஆகும்.
மார்ச் மாதத்தில் இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. மாதத்தின் தொடக்கத்தில் பெய்ஜிங்கின் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் உலக ஊடகவியலாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, “உலகத்தின் பாசிசத்திற்கு எதிரான போரிலும், ஜப்பானிய ஆக்கிரமிப்பு போரிலும் சீனாவின் வெற்றி” என்று 80-ஆவது ஆண்டு நினைவேந்தலை சீனா நிறைவேற்றுமென்று அறிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் கவனத்தைப் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இந்நிலையில்தான், சீன–ஜப்பான் உயர்நிலை பொருளாதார பரிமாற்ற மாநாட்டுக்கு சென்ற வாங் திரும்பிய பிறகு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கத்தில், “ஜப்பான் இரண்டாம் உலகப்போருக்குப் பின் தன்னுடைய நிலையிலும் கருத்திலும் ஏற்படுத்தியிருக்கும் அணுகுமுறையானது சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செல்வதன் முன்நிபந்தனைதான்”. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆசியாவிற்கும், உலகிற்கும் ஜப்பானின் பங்களிப்புகள் - சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேர்த்து - பொருத்தமற்றது என்பது சீன அரசாங்கத்துடைய கருத்தாகும்.
இடையில் இந்தியா
சுவாரசியாமனது என்னவென்றால் இந்தியாவுக்கான சீனாவுடைய அணுகுமுறை, அமெரிக்காவுக்கான அணுகுமுறைக்கும் ஐரோப்பா, ஜப்பானுக்கான அணுகுமுறைக்கும் இடையில் எங்கோ இருப்பதாகத் தோன்றுகின்றது.
இந்தியாவின் அயலுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும், தன்னுடைய சீன இணை, துணை அமைச்சர் சுன் வெய்தொங்குக்கும் இடையிலான சந்திப்புக்குப் பின்னரான அறிவிப்பில் “நம்பிக்கையை வலுப்படுத்தவும், சந்தேகங்களை களையவும் கருத்து வேறுபாடுகள் இல்லாத உறைவைக் கையாளவும்” வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த குறிப்பு அறிவுறுத்துவது என்னெவென்றால் மேற்கண்ட பொறுப்பு சீனாவுக்கு அல்ல, இந்தியாவுக்குதான் என்பதாகும். அறிக்கையின் மற்றொரு பகுதியில், “இரு நாடுகளுக்கான உத்தியிலும் நீண்டகால கண்ணோட்டத்திலும் கவனம் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிடுகின்றது. மேலும் “ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் அவசியம் தேவை” என்பதையும் பேசுகின்றது. மேற்கண்டவை அனைத்திலும் இந்தியாவுக்கு குறைபாடுள்ளது என்று சீனா மறைமுகமாகக் கூறுகிறது.
மிஸ்ரிக்கும் வாங்குக்கும் இடையிலான சந்திப்புக்குப் பின்னர் பெய்ஜிங்கின் அறிக்கை சில முக்கியமான கருத்துகளை முன்வைக்கின்றது, “இரு தரப்பினரும் நெருங்கி நகரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… (சந்தேகம், அந்நியப்படுத்துதல் மற்றும் புறந்தள்ளக் கூடாது). மீண்டும் சீனா கூறும் “பரஸ்பரம்” என்பது இந்தியாவுக்கானது. காரணம் சீனாவின் பொறுப்பை விடவும் இந்தியாவுக்கானதுதான் என்று தெரிவிக்கிறது காரணம் இந்தியாவின் செயல்பாடுகள் அவ்வாறு இருப்பதாய் பெய்ஜிங் கருதுகின்றது.
இரு நாடுகளும் 75-ஆவது ஆண்டு இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வேளையில் நேரடியான விமானப் போக்குவரத்தைத் தொடங்குதல், மக்களுக்கும் மக்களுக்குமான உறவை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுகின்றது, “பொதுவான விருப்பம், நல்லெண்ணம் ஏற்படுத்த வேண்டும்” என்று இந்தியா மீது அழுத்தமும் உண்டு. எளிமையாக கூறினால், “இராஜதந்திர செயல்தந்திரமும் நீண்டகால தொலைநோக்கும்” என்பதைத்தான் பெய்ஜிங் முன்வைக்கின்றது. இதன் மூலம் புது தில்லி எல்லைப் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 2020-க்கு முன்னரான நிலையைத் தொடர வேண்டும் என்ற வலியுறுத்துவதிலிருந்து விளக்கவேண்டும் என்பதையே பெய்ஜிங் விரும்புகின்றது. மேலும் இந்திய ஊடகங்களும் ஆய்வாளர்களும் சீனாவை விமர்சனம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.
சுறுசுறுப்புடன் வளந்துவரும் ஓநாய் இராஜதந்திரம்
சீனாவின் இராஜதந்திர அணுகுமுறையில் மாற்றத்தைக் காணமுடிகின்றது. இது அழுத்தத்ததிலும் வடிவத்திலும் வெளிப்படுகின்றது. பெய்ஜிங் வாஷிங்டனுடன் இருக்கும் வேறுபாட்டை உணர்ந்துள்ளதுடன், அதனுடைய மேலாதிக்கத்திற்கு சவால்விடவும் தயாராக இருப்பதாக தோற்றமளிக்க முயற்சிக்கின்றது. சீனா அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பானுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை கடினமாக்க கருதுவதுடன் ஒருவேளை டிரம்பின் உலகுக்கு எதிராக மாறினால் அவர்களுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதை வாய்ப்பாகவும் பார்க்கின்றது.
இந்தியா சீனாவுக்கான சமமான வளரும் போட்டியாளர். அதுமட்டுமல்ல இந்தியா அமெரிக்காவுக்கான நெருங்கிய கூட்டாளியும்கூட. சீனா தன்னுடைய நாட்டு மக்களுக்கு கூறுவது, இந்தியா சீன பொருட்களுக்கான முக்கியமான சந்தையாகவும் இருப்பதால் மென்மையான இராஜதந்திர உத்தியையே கையாளுகின்றது. எவ்வாறிருந்தாலும் இந்தியாவுக்கு அவருடைய இடத்தைக் காட்ட உள்ள முயற்சிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. தங்களுடைய உள்நாட்டு பார்வையாளர்களுக்கு – உதாரணமாக நிறுவனங்களுக்கும் பொறியாளர்களுக்கும் - சில கருத்துக்களை உணர்த்துகின்றது. ஒருவேளை இந்தியா சீனாவின் எதிர்பார்ப்புகளை சந்திப்பதில் தவறிவிட்டால், அந்நாட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகின்றது.
Original: Jabin T. Jacob. 2025. ‘The Moving Needle of China’s Wolf Warrior Diplomacy’, India’s World, Vol. 1, Issue 3, May-June.
Translated by Kalathi Veerasami
Share this on: