...

2 March 2026

சீனாவைப் பொறுத்தவரை வயது என்பது ஓர் எண்ணுக்கும் மேலே



சீன அதிபர் ஜியாங் ஜமின், 1990 களில் அரசுமுறைப் பயணமாக எகிப்துக்குச் சென்றார். அப்போது எகிப்தியர்கள் தங்களுடைய நாகரிகத்தை 5,000 ஆண்டுகள் பழமையானதாகக் குறிப்பிட்டுள்ளதைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் நாடு திரும்பியதும், எகிப்தியர்களைப் போலவே நாமும் தொன்மையான நாகரிகம் கொண்டவர்கள் என்று உரிமை கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அதுவரையில் இருந்த சீன வரலாற்றுப் பதிவுகளின்படி 3,000 முதல் 4,000 ஆண்டுகள் வரலாற்றையே கொண்டிருந்தது சீன நாகரிகம்.  

இந்தக் கதை நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் பெய்ஜிங் உலகை எப்படிப் பார்க்கிறது என்பதோடு, உலக வரலாற்றில் தன் இடத்தை எப்படிப் பார்க்கிறது என்பதை விளக்குகிறது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடனும், இந்தியா, ஜப்பான் போன்ற பிற ஆசிய சக்திகளுடனும் புவிசார் அரசியல் போட்டியில் சீனா இருக்கின்றது. இந்நிலையில் சீனாவின் கம்யூனிஸ்டு தலைவர்கள், தங்களுடைய நாடு உலகத்தின் உச்சிக்கு செல்லக் கருதுவதுடன் அமெரிக்காவின் இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான கருவியாக சீன நாகரிகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் காலகட்டம் என்பது ஓர் எண்ணுக்கும் மேலே என்று கருதுகின்றனர். மேலும் அவர்களுடைய காலகட்டம் அவர்கள் கணக்கில் பகையாளிகளின் காலத்துக்கும் மேலே. இந்தியா போன்ற ஒத்த நாகரிகத்தைக் கொண்ட சீனாவால் இதை அடைவது சாத்தியம் இல்லை என்றாலும், தங்களுடைய சொந்தக் கருத்தை வலியுறுத்த நுட்பமான, வெளிப்படையான பிற வழிகளைப் பின்பற்ற முனைகின்றனர். 

யாங்கீயின் வருகை

கிரேக்க நாகரிகம் சீன நாகரிகத்தைப் போன்றே தொன்மையானது. கிரேக்கமும் சீனாவும் 2017 ஆம் ஆண்டு தொன்மையான நாகரிகங்களின் மன்றத்தைத் தொடங்கின. இதன் மூலம் மேற்கத்திய ஆதிக்கத்தின் இருப்பிடமாக அரசியல், பொருளாதார தளங்கள் தொடப்போவதில்லை என்பதைத் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இது ஒரு புதிய தேசமாக இருக்கும். சீனா இந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவிற்கு இல்லாத நாகரிக நடைமுறைகள்  தங்களை போன்ற தொன்மையான நாகரிகம் உடைய சமூகங்கள் மட்டுமே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலஸ்க்காவில் நடைபெற்ற ஜோ பைடன் நிர்வாகத்திற்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் மேற்கண்ட கருத்தைச் சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், வெளியுறவு ஆணையத்தின் தலைவருமான யாங் சியேச்சி வெளிப்படுத்தினார்.  டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகளால் பெரிதும் அவதிப்பட்டனர் சீனர்கள். இந்த சூழலில் இருந்து மீள்வதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. “அமெரிக்காவைக் குறித்து நாங்கள் அதிகமாக நினைத்தோம். அமெரிக்க தரப்பானது தேவையான இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றும் என்று நினைத்தோம்” என்று யாங் அறிவித்தார். மேலும் “சீனத் தரப்பின் முன், அமெரிக்காவிற்கு சீனாவுடன் சரிசமமாக, வலுவான நிலையில் இருந்து வாதாடுவதற்கு தகுதி எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.    

அமெரிக்காவுக்குள் இருப்பவர்களுக்கும் மற்ற நாகரிகம் குறித்து அறிந்தவர்களுக்கும் சீனா போன்ற சிறந்த நாகரிகம் குறித்தோ தொன்மையான கலாச்சாரம் குறித்தோ தெரியாமல் இருக்கலாம். ஆனால் சீனா, பெரும் அழுத்தம் நிலவும்போது கூட அதன் நீண்ட நெடிய கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதுடன் இராஜதந்திரக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சீனாவின் பலம் குறைந்ததாகக் காணப்பட்டாலும், சீனர்கள் உயர்வானவர்கள் என்று யாங் கூறினார். 

நீண்ட பாதைக்குப் பின்னால்

இந்த அறிகுறிகள் தற்செயலானவை அல்ல. சீனாவின் முக்கிய பிம்பமான மாவோ கலாச்சாரப் புரட்சியின்போது சீனாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களையும் கலைப்பொருட்களையும் அழித்தார். அதற்கு மாறாக தற்போதைய CPC அதிபர் ஷி ஜின்பிங் ஆட்சியை நீட்டிக்கவும் சட்டபூர்வ நிலைப்பாட்டிற்காகவும் சீனாவின் வரலாறு, கலாச்சாரத்தை ஓர் ஆயுதமாக ஏந்த முற்பட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே “சீன ஞானம்” என்றும் “சிறந்த சீனத் தொன்மைக் கலாச்சாரம்” என்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இப்போது “வரலாற்றில் நம்பிக்கை” என்றும் “கலாச்சாரத்தில் நம்பிக்கை” என்றும் உள்ள “சீனாவின் தன்னம்பிக்கை” என்ற கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் லாவோசில் நடைபெற்ற 27 வது ஆசியான் பிளஸ் உச்சி மாநாட்டில் சீனப் பிரதமர் லீ ச்சியாங், “ஆசிய உணர்வை வலுப்படுத்தல்” என்றும் “கீழைத்தேய ஞானத்தை பயன்படுத்துதல்” என்றும் பேசினார். மேற்கண்டவை யாவும் “சீன ஞானம்” என்பதின் தொகுப்பாகவும் “ஆசிய மதிப்புகள்” என்ற சொல்லணியின் உள்ளர்த்தமாகவும் இருப்பதை காணமுடிகின்றது. 

வரலாற்றுப் போர்கள்

இந்தியாவும் சீனாவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்ட ஒத்த சமூகங்கள் ஆகும். இவ்வாறு இருக்கும் போது எப்படி சீனா இந்தியாவைவிடவும் மேன்மையானது என்பதை வெளிப்படுத்த முடியும்? இந்தியாவின் மரபுவழிப்பட்ட தொன்மையை துண்டாட சீனா மூன்று வழிகளைப் பின்பற்றுகிறது.  

முதலாவதாக சீனாவின் அறிக்கைகளும் ஆவணங்களும் “சீனாவும் இந்தியாவும் தொன்மையான நாகரிகங்கள்” என்றும் “நீண்ட வரலாறுகள் கொண்டவை” என்றும் கூறுகின்றது. பின்னர் படிப்படியாக சொற்றொடரிலும் பொருண்மையிலும் மாற்றம் ஏற்பட்டு “சீனாவும் இந்தியாவும் சமமான வரலாற்றைக் கொண்டவை” என்றும் “சீனா 5,000 ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கொண்டது” என்று மாறுவதையும் நுட்பமாகப் பார்க்க வேண்டும்.

         காலப்போக்கில் இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான பொது ஆவணங்களில் இந்தியாவின் தொன்மைக் குறித்த குறிப்புகள் குறைந்துவிட்டதைக் காணமுடிகின்றது. அதேநேரம் சீனாவின் “5,000 ஆண்டுகால நாகரிகம்” என்ற பதம் மேலும் மேலும் மேற்கோள் காட்டப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் “அமைதி மற்றும் நல்லிணத்திற்கான நாட்டம்” என்ற தெளிவான தோற்றத்தை வெளியுலகில் ஏற்படுத்த “5,000 ஆண்டுகளுக்கும் மேலான” தொன்மையான நாகரிகம் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றது. இந்தியா சீனாவின் வலிந்து வலியுறுத்தும் கருத்துப் பரவலைக் குறித்து பரிசீலனை செய்யவில்லை என்றே தோன்றுகின்றது.   

சீனாவின் இரண்டாவது உத்தியானது நுட்பமானது அல்ல. அண்மைக் காலங்களில் இந்தியா தனக்கே உரிய நாகரிக அடிப்படையிலான சொற்களஞ்சியத்தை சர்வதேச தளங்களில் பயன்படுத்தி வருகின்றது. இது குறித்து சீனா வெளிப்படையாகவே எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியா நடத்திய G-20 மாநாட்டுக் கூட்டங்களின் ஆவணங்களில் “வாசுதேவக் குடும்பம் (உலகம் ஒரு குடும்பம்)” என்ற கருத்தாக்கத்தை பயன்படுத்துவதை விரைவாக எதிர்த்துள்ளது. இத்தகைய உடனடியான எதிர்ப்பானது சீனாவின் வரலாறு குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்துகின்றது. 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீனாவின் அத்துமீறிய எல்லை மீறல்களும் தீர்க்கப்படாத இருதரப்பு பதட்டங்களும் புது தில்லியில் நடந்த G-20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்திருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். மற்றொன்று இந்தியப் பிரதமர் அனைவரின் கவனத்தின் மையமாகவும் இருக்கும் ஓரு நிகழ்வில் தானும் ஒரு தலைவராகத் தோன்றக்கூடும் என்பதாலும் கூட சீன அதிபர் பங்கேற்பை தவிர்த்திருக்கலாம். அவர் தனக்குப் பதிலாக சீனப் பிரதமருக்கும் கீழ்நிலையில் இருக்கும் ஒருவரை அனுப்பினார். 

இறுதியாக இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் நேர்மை இல்லாதது போன்று சித்தரிக்கப்படுகின்றது. சீனாவின் கருத்தியலாளர்கள் புது தில்லி சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாகவும், சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாகவும் கூறுகின்றனர். இந்தியாவும் அமெரிக்காவை பயன்படுத்துவதாக சித்தரிப்பது இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கான முகாந்திரத்தை வழங்குகின்றது.

ஏனெனில் அது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ள இயலாத ஒன்று என்றும் மற்றொரு வலுவான சக்தியைச் சார்ந்திருக்க வேண்டும் என்று பொருள்படுகின்றது. இது போன்ற கருதுகோள்கள் ஒரு நீண்ட வரலாற்று தோற்றம் கொண்ட அணுகுமுறையாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டார்ஜிலிங்கில் நாடுகடத்தப்பட்ட சீன அறிவுஜீவியான காங் யுவே, இந்தியா ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைச் சீனாவுக்கான எச்சரிக்கையாகவும் உள்நாட்டுச் சீர்திருத்தத்துக்கான தூண்டுதலாகவும் கருதினார். காங்கின் கருத்துகள் அன்றிலிருந்து இன்றுவரை சீனர்களின் கருத்தோட்டத்தை ஆழமாக பாதித்துள்ளதைக் காணமுடிகின்றது.    

 

கடந்த காலத்தைத் திரும்பி நோக்குதல்

இந்தியாவின் “இராஜதந்திர சுயாட்சி” குறித்த குறிப்புகளைக் கண்டு சீன அறிஞர்களும் இராஜதந்திரிகளும் இந்தியாவை நிராகரிக்க முயற்சி செய்வதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் உலகெங்கிலும் உள்ள தாராளவாத, ஜனநாயக ஆட்சிகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் CPC இன் கொள்கைகளுக்கு முரணாக தோன்றுவது காரணமாக இருக்கலாம். சீனாவை எதிர்க்கும் எல்லோரையும் அமெரிக்காவின் கட்டளைப்படி செயல்படுவதாக வகைப்படுத்துகின்றது. இந்த அணுகுமுறையை சீன–எதிர்-அமெரிக்கா என்ற பதத்தினைக் கொண்டு வகைப்படுத்துவது கருத்தியல் மற்றும் செயல்பாட்டு நிலையில் இயங்கும் சீன வெளியுறவு அறிஞர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் எளிதானது.   

அண்மைக் காலங்களில் சீனா மேற்கொண்டுள்ள “பெல்ட் அண்டு ரோடு (பட்டுப் பாதை)” திட்டத்தின் ஒரு பகுதியாக சில முயற்சிகளை அந்த நாடு முன்னெடுத்துள்ளது. இது மூன்று புதிய நிறுவனங்களில் ஒன்றாகும். “உலகளாவிய நாகரிகத் தேடல்” Global Civilization Initiative (GCI). இந்த கருத்தியலை இந்தியா மிக ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். மேற்கண்ட அமைப்பானது “வெவ்வேறு நாகரிகங்களின் பன்முகத்தன்மையும் அழகும்” என்றும் “பண்டைய சீன ஞானத்திலிருந்து உருவான பாரம்பரிய சீனக் கலாச்சாரம்” என்றும் வெவ்வேறு நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலை “சமமான உரையாடல் மற்றும் சமமான மரியாதை” என்றும் பல்வேறு தலைப்புகளில் சீனாவை முதன்மைப்படுத்துகின்றது. இதனை உற்று நோக்கும்போது சீனாவைத் தவிர்த்த மற்ற நாகரிகங்கள் அனைத்தும் சீன நாகரிகத்திற்கு சமமானவை அல்ல என்ற பொருளைத் தருகின்றது.  

இந்த GCI என்பது வெறும் கருத்தாக்கம் அல்ல. இவ்வமைப்பு உண்மையான உலக விளைவுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் சீனாவின் உள்நாட்டு அரசியல் விவரிப்புகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை எடுத்துக்காட்டுகின்றது. சீனர்கள் இதுவரை செய்த பலவற்றையும்விட அவர்களின் கலாச்சார மேன்மை உணர்வை கூர்மைபடுத்துகின்றது. இந்தியாவும் பிற உலக நாடுகளும் இதுவரை செய்தததைப் போலவே சீனாவின் இந்த முன்னேற்றங்களையும் செயல்பாடுகளையும் புறக்கணிக்காமலும் எதிர்க்காமல் இருப்பதும் வளர்ந்துவரும் புதிய வடிவிலான உலகளாவிய அரசியல் மேலாதிக்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குச் சமமாகும்.


This article was originally published as Jabin T Jacob. 2024. ‘For China, Age is More than a Number’. India’s World. 9 December.

Translated by Kalathi Veerasamy