இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பல்வேறு தளங்களில் உறவுகள் இருப்பினும் சவால்களும் நீடிக்கின்றன

07 July 2026  |  

Jabin T. JacobAnand P. Krishnan
Economy
Geopolitics

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்.சி.ஓ (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சீனாவுக்கு வருகை தந்துள்ளார். இருப்பினும், 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா- சீனா இருதரப்பு உறவிலும், சர்வதேச அரசியல், பொருளாதார சூழலிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.   

2017 ஆம் ஆண்டு டோக்லாம் மோதலுக்குப் பிறகு, இந்தியா-சீனா உறவுகளுக்கு ஒரு புதிய பாதையை வழங்கும் நோக்கில் பலவிதமான முன்னெடுப்புகள் நடைபெற்றன. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் சீன அதிபருமான ஷி ஜின்பிங்குக்கும் இடையேயான ‘முறைசாரா உச்சி மாநாடுகள்’ முடிவுற்ற பின்னர் இரு நாடுகளின் உறவும் சிக்கலுக்கு உள்ளாகியிருந்தது. 2020 ஆம் ஆண்டில்  உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் (LAC) கடந்து சீனா மேற்கொண்ட அத்துமீறல்கள், அதே ஆண்டு ஜீன் மாத மத்தியில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலிலும் உயிரிழப்புகள் உச்சத்தைத் தொட்டன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் புது தில்லி பெருமளவிலான படைகளைக் குவித்து வருகின்றது. மேலும் எல்லையின் உள்கட்டமைப்பை இன்றுவரை விரிவுபடுத்தி இராணுவ ரீதியாக பதிலளித்துள்ளது.

இருப்பினும், பொருளாதார நோக்கில் இந்தியா, சீன இடையே வர்த்தகம், முதலீடுகள், செயலிகள் (apps), சீனக் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகள், விமான சேவைகள் முதலியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை அடுத்து வரும் சில மாதங்களில் படிப்படியாக நீக்க வாய்ப்புள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணையை வாங்குவதால், உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரினை ஏதோ ஒரு வகையில் தொடந்து நடைபெறுவதற்குக் காரணம் என கருதப்படுகின்றது. இதன் மூலம் அமெரிக்காவானது அதிகளவிலான வரிவிதிப்பில் பிரேசிலுடன் இந்தியாவும் இணைத்துள்ளது.

இதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவின் மீது 25% வரியை விதித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினாலேயே இந்தியா, சீனாவின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. ரஷ்யாவிடமிருந்து சீனாவே அதிகளவிலான எண்ணையைக் கொள்முதல் செய்கிறது என்ற போதிலும், அமெரிக்கா சீனாவின் மீது அத்தகைய எவ்விதமான வரிகளையும் விதிக்கவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.  

இந்தியா எவ்வாறு இத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குச் சென்றது என்ற வினாவுக்கு நம்மை இட்டுச் செல்லுகின்றது. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்திய தொழிற்துறையினர் சீன நிறுவனங்கள் முன்வைக்கும் பொருளாதார, பாதுகாப்பு சார்ந்த சவால்களைப் புரிந்து கொள்வதில் பின்தங்கியே உள்ளனர். இந்நிலையில்தான் உலகப்பொருளாதாரச் சூழலும், அமெரிக்கா போன்ற முக்கியமான நாடுகளுடன் கொண்டிருக்கும் பொருளாதார உறவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் இந்திய தொழிற்துறையினர் போதிய முன்னாயத்தமின்றி, பலவீனமான நிலையில் இருப்பதைக் காணச்செய்கின்றது. இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளும், நிர்வாகத்தின் பங்கும் இருப்பதை ஜிஎஸ்டி (GST) வரி சீர்திருத்த முன்னெடுப்பானது நமக்குத் தெளிவுறுத்துகின்றது.     

மோடியின் சீனப் பயணமானது அமெரிக்க நடவடிக்கையுடன் நேரடியாகத் தொடர்பில்லாத போதிலும், இந்தப் பயணம் இருதரப்பு, பலதரப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. 2024-ஆம் ஆண்டு காசனில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது தொடங்கப்பட்ட “இயல்பாக்க உத்திமுறையின்” ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் உள்ள சுமார் 50,000 படைவீரர்களை அப்பகுதியிலிருந்து நீக்கப்படுவது போன்ற முக்கியமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இது போன்ற பாதுகாப்புச் சார்ந்தவற்றை விடவும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டியதே இன்றியமையாததாகும்.

சீனாவுடனான மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையைத் தவிர, கடந்த சில மாதங்களாக உரம் சார்ந்த மூலப்பொருட்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், மின்சார வாகனத் தயாரிப்புக்கான அரியவகை காந்தங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் மூலம் சீனா, இந்தியாவை பொருளாதார நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், இந்தியச் சந்தையானது தேவையான சீன முதலீடுகளையும், தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் ஈர்க்கும் என்றும் மோடி நம்புகிறார். சீனர்கள் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பன்முக உறவுகள் சார்ந்த தளத்தில் எஸ்.சி.ஓ (SCO), பிரிக்ஸ் (BRICS) போன்ற அமைப்புகளில் தீவிரமாகப் பங்கேற்பதன் மூலம் தன்னுடைய ‘சுயாட்சி உத்தி’ (strategic autonomy) எனும் கோட்பாட்டை புது தில்லி முன்னிறுத்தி செயலாற்றும். தனது பதவிக்காலத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவுடன் ஒன்றிணைந்திருந்த பிரதமர் மோடிக்கு, தற்போது உலகின் பிற பகுதிகளுக்கும் கவனத்தைச் செலுத்துவது என்பது பயனுள்ள சமநிலைப்படுத்தும் நடவடிக்கையாக அமையும். சீனாவிற்குச் செல்வதற்கு முன்பாக பிரதமர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது முக்கியமான ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார். ஆயினும், இராஜதந்திர நோக்குடன் காணும்போது ‘உலகளாவிய தெற்கு’ (Global South), அதாவது தெற்கு நாடுகளுக்கு இந்தியாவானது கூடுதலான முனைப்பையும் முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.     

இந்தியா எஸ்.சி.ஓ (SCO) உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இணைந்து பங்காற்றியதைச் சீனா தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயலும். இதனைச் சுட்டிக்காட்டி இந்தியாவானது மேற்கத்திய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான கூட்டணி போலச் சீனா சித்தரிக்கும். மேலும் சீனா முக்கியப் பங்காற்றும் ஆர்.சி.இ.பி (RCEP) போன்ற பலதரப்பு ஒப்பந்தங்களில் இந்தியா இணைந்து செயலாற்ற முனையும் என்றும் பெய்ஜிங் எதிர்பார்க்கின்றது. இத்தகைய நிலைமையானது சீனாவுக்கு எதிராக அமெரிக்கா இருப்பதையே இந்தியாவில் காணும் தோற்றமாகும். ஆனால் அமெரிக்காவின் இந்தியா குறித்த கொள்கைகள் இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனா பக்கம் தள்ளிவிடும் என்று இப்போதே உறுதியாக கூற இயலாத ஒன்றாகும். வாஷிங்டனுக்குச் சாத்தியமான சலுகைகளை வழங்கி, இந்தியாவை அமெரிக்கா நோக்கி அழைத்துச் செல்லவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் முயலுவார்கள் என்றே தோன்றுகின்றது.

இதற்கிடையில் பெய்ஜிங்குடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது, தனது அண்டை நாடுகளில் உள்ள சீன அழுத்தத்தைக் குறைக்கும் என்று புது தில்லி நம்புகின்றது. ஏனெனில், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய இராணுவ, மற்ற ஆதரவுகள் மறக்க இயலாத அண்மைய நிகழ்வுகளாகும்.

இந்தியா-சீனா இருநாடுகளுக்கு இடையிலான உறவில் உள்ளார்ந்த அவநம்பிக்கைகள் இருப்பதை அனுமானிக்க முடிகின்றது. ஆனால், சீனாவில் நடைபெற்ற எஸ்.சி.ஓ (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதையும், அவருக்குச் சீனா அளித்த உற்சாகமான வரவேற்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்டவை டிரம்ப் நிர்வாகத்தின் சர்வதேசக் கொள்கைகளால் ஏற்பட்ட கொந்தளிப்புகளைச் சமாளிப்பதற்காக இரு நாடுகளும் மேற்கொள்ளும் ’இடர் காப்பு உத்திகளின்’ (hedging strategies) ஒரு பகுதியாகவே கருத இயலும்.    


This article was originally published in Malayalam as Jabin T. Jacob and Anand P. Krishnan. 2025 ‘ചാരുന്നേയുള്ളൂ ; ഇന്ത്യ ചായുന്നില്ല’ (Only Leaning, India is Not Aligning). Malayala Manorama. 2 September.

Translated by Kalathi Veerasamy