
உலக நாடுகளின் மோதல்களில் தனக்கே உரிய பாணியிலான சீனாவின் மத்தியஸ்தம் முயற்சிகள்
உலகத்தின் ஆற்றல் மிக்க நாடுகள் சில நேரங்களில் மோதல்களை ஆரம்பிப்பதுடன், சில நேரங்களில் ஒரு பக்க சார்புத் தன்மையையும் எடுக்கின்றன. ஒரு சில நேரங்களில் இடைத்தரகராகச் செயல்பட்டு மோதல்களைத் தடுக்கவும் முயற்சிக்கின்றன.
1990 களில் அமெரிக்காவானது ஏறத்தாழ 11 மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. அவை மத்திய அமெரிக்கா, தெற்கு அயர்லாந்து, முன்னால் யுகோஸ்லோவோக்கியா, சூடான் உள்ளிட்ட நாடுகளாகும். ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னெவென்றால் சில மோதல்களில் அமெரிக்காவே ஒரு தரப்பாகவும் இருந்துள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மிகச் சமீபத்திய உதாரணமாக வாஷிங்டன் ஆனது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரில் தலையிட்டதுடன் ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களின் மீது குண்டுகள் வீசித் தாக்குதலையும் நடத்தியுள்ளது. அமைதி முயற்சியில் ஈடுபடும் அமெரிக்கா அதே வேளையில் தாக்குதலையும் நடத்தியிருப்பதை உலகத்தின் அடுத்த வல்லரசாகப் பார்க்கப்படும் சீனா கண்டித்துள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட புரிதல்களுடன் சீனா எவ்வாறு மத்தியஸ்தம் செய்கிறது என்பதையும் அதனுடைய நோக்கங்களையும் புரிந்து கொள்ள இக்கட்டுரை உதவும் என்று கருதுகிறேன்.
சீனா, சமீபகாலங்களில் உலகத்தில் நடக்கும் உள்நாட்டு, பன்னாட்டுப் போர்களில் மத்தியஸ்தம் செய்யும் நபராக பங்கேற்றுள்ளது. பனிப்போர் காலங்களில் ‘ஒரு பக்கச் சார்புத்தன்மை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்றே மோதல்களைத் தீர்த்து வைக்கும் வேலையில் ஈடுபடுவதைவிட மோதலில் ஈடுபடுவதைத்தான் வழக்கமாக கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. உண்மையில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த மோதலும் போராட்டமும் அவசியமாகக் கருதுகிறது. அமெரிக்காவைப் போலவே சீனாவும் அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்த இந்தியா முதலான நாடுகளை வேறு கண்ணோட்டத்துடன் பார்த்ததுடன், வெறுக்கவும் செய்தது.
சீனாவின் நோக்கங்கள்
மாவோவினுடைய சகாப்தம் முடிவுக்கு வந்ததுடன் தங்ஷாவ்பிங்கின் சீர்திருத்தங்களும் நடைமுறைக்கு வந்தன. இக்காலகட்டத்தில் சீனாவானது சர்வதேச அரங்கில் நுழைவதற்காக தங்களுடைய பல்கலைக்கழகங்கள், வெளியுறவுக் கொள்கை அமைப்புகளை மாற்றி அமைத்தது. இம்முறை சீனா உலக நாடுகளிடமிருந்து முதலீடுகளையும் நிபுணத்துவத்தையும் நாடும் அதே சமயம், தன்னுடைய முரட்டுத்தனமான அணுகுமுறையைக் குறைத்துக் கொண்ட சக்தியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. இத்தகைய உலகளாவிய ஈடுபாட்டைச் சாத்தியமாக்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா பணிகளில் அமெரிக்காவின் இராணுவ, காவல்துறைப் பணிகள் குறைந்து இருப்பதையும் சீனாவின் பணிகள் அதிகரித்து இருப்பதையும் காணமுடிகின்றது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டைய நிலவரப்படி ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் அமெரிக்கா வெறும் 19 பணியாளர்களை மட்டுமே ஈடுபடுத்தியிருந்தது. ஆனால் சீனா 1,800 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் எட்டாவது பெரிய பங்கேற்பாளராகத் திகழ்ந்தது. 2024-2025 காலகட்டத்தில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு அதிக நிதி அளித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஐ.நாவுக்கான பங்களிப்புகள் குறைக்கப்பட்டதுடன் சில மறு ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தது. மேற்கண்டவற்றை நோக்கும்போது சீனாவானது இத்துறையிலும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெறக்கூடும்.
ஐ.நா வின் அமைதி காக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதற்குரிய பண்புகளையும் நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கும் என்பது பொதுவான நிலைப்பாடாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வேறுபாடுகள் சீனாவுக்கு சில நேரங்களில் சாதகமான சூழலைத் தரும்.
சமீபத்தில் சீனா இரு நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தது. ஒன்று 2000 ஆம் ஆண்டில் வட கொரிய அணுசக்தி பிரச்சனையில் ஆறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டு மியான்மரில் வடக்கு காச்சின் மோதலிலும் மத்தியஸ்தம் செய்திருந்தது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கு சூடான் உள்நாட்டுப் போரில் சீனாவின் மத்தியஸ்தம் முக்கியமானதாகும். இதில் அமைதிக்கான ஒப்பந்தமும் கையொப்பமானது. மேலும் சிரியா உள்நாட்டுப் போரிலும் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையிலான பாலமாக இருந்து போரினை முடிவுக்கு கொண்டுவந்தது.
தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டில் சீனாவானது ஆப்கானிஸ்தான் போருக்கான அமைதி நடவடிக்கைகளில் பார்வையாளராக இணைந்தது. சீனாவின் இம்முயற்சிகள் ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் ஆசியாவின் இதயம் ஆகிய பலதரப்பு ஈடுபாடுகளில் அதன் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தது. இதன் மூலம் தாலிபான்களுக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை காபூலில் முன்னின்று நடத்தியது.
சீனா ஏன் மத்தியஸ்தம் செய்கிறது?
இருப்பினும் சீனா ஏன் மத்தியஸ்தம் செய்கிறது? இதற்கு முக்கியமான காரணம் அதனுடைய தேசியப் பாதுகாப்பு குறித்த விடயங்களே ஆகும்.
சீனா தன்னுடைய அண்டை நாடுகளில் நிகழும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருப்பதைக் காணலாம். இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்களில் மத்தியஸ்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டாலும், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளில் தீவிரமாகச் செயல்படுவதையும் உற்று நோக்க வேண்டும். மியான்மரில் இனக்குழுக்களின் ஆயுதப் படைகளுக்கும் அரசின் இராணுவத்திற்கும் இடையே சிக்கலான மற்றும் தொடர்ச்சியான மோதல்கள் நிலவுகின்றன.
அதேவேளையில் சீனா, ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மருக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான மத்தியஸ்தம் செய்யவும் முயன்றுள்ளது. சீனாவின் இத்தகைய முயற்சிகள் அரிதாகவே சாதகமான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவானது ரோஹிங்கியர்களின் பிரச்சனைகளைப் போக்கவோ அல்லது இச்சிக்கலுக்கான தீர்வையோ காண்பதைவிட மியான்மர் அரசுடனான உறைவைப் பேணவே கவனம் செலுத்துகிறது. டாக்கா மற்றும் நேய்பிடாவ் (Naypyitaw) இடையேயான தகவல் தொடர்பைத் தக்கவைப்பதிலுமே சீனா அதிகம் கவனம் செலுத்துவதாக வங்கதேசம் கருதுகிறது.
சீனாவானது தனக்குள்ள நீண்டகால செல்வாக்கை இருதரப்புடனும் கொண்டிருந்த நிலையிலும் மியான்மர் அரசுக்கும் ரோஹிங்கியாக்களின் பல்வேறு ஆயுதக் குழுக்களுடனும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் சீனாவால் இப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட இயலவில்லை. மேற்கண்ட எத்தகைய சூழல்களாக இருந்தபோதிலும் வழக்கமாக சீனா தன்னுடைய சொந்தப் பாதுகாப்பு மற்றும் தூதரக நலன்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது. இதன் மூலம் மியான்மருடனான எல்லைப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தைப் பேணுதலே சீனாவின் உள்ளார்ந்த திட்டமாகும். அத்துடன் பிற வல்லரசுகளோ நாடுகளோ இவ்விவகாரத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதிலும் சீனா கவனம் செலுத்தியுள்ளது.
அமைதிக்கான முயற்சி மற்றும் நாடுகளுக்கு இடையிலான மத்தியஸ்தம் செய்வது போன்றவை சீனாவின் விருப்பமாக உள்ளது. இந்த விருப்பத்தைத் தன்னுடைய சொந்த சர்வதேச நலனைக் கருத்தில் கொண்டே அமைத்துக் கொள்கிறது. பெய்ஜிங்கின் இந்த தேவையானது “ஆக்கப்பூர்வமாக எதையாவது சாதிக்க வேண்டும்” அல்லது ”குறைந்தபட்சம் எதையாவது செய்வது போன்று காட்டிக்கொள்ள வேண்டும்” என்ற நிலையில் மட்டுமே நின்றுவிடுகிறது. சீனாவின் சொந்த மொழிநடையில் சொல்ல வேண்டும் என்றால் “ச்சி ச்சி யோவ் சுவோ சுவோ வெய்” (jiji yousuo zuowei). இச்சொற்றடரானது சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான ஹூ ஜிண்டாவால் (Hu Jintao), தங்சாவ்பிங்கின் (Deng Xiaoping’s) 24 சொற்கள் கொண்ட உத்தியில் சேர்க்கப்பட்டதாகும். இதனுடனும் மற்றவைகளையும் சேர்த்து ’சீனா தன்னுடைய திறன்களை மறைத்துக் கொண்டு சரியான நேரத்திற்காக காத்திருக்க் வேண்டும்’ (taoguang yanghui) என்ற கருத்துகளை நடைமுறையுடன் வகுத்துக் கொள்ளும்.
இதன் விளைவாக, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயும் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா முன்வந்துள்ளது. இவ்விரு பேச்சுவார்த்தையிலும் முறையே ரஷ்யாவையும் பாலஸ்தீனத்தையும் ஆதரிக்கின்றது. ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நடுநிலைமை வகிக்கின்றது. வேறுவிதமாகக் கூறவேண்டும் என்றால் மேற்கத்திய வணிக முறைக்கு மாற்றாக சீனா விளங்க வேண்டும் என்ற சித்தாந்த நோக்கங்களும் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் சீனா ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தாலிபான்கள் மேற்கத்திய எதிர்ப்பு மற்றும் ஜனநாயக எதிர்ப்பு எனும் நிலையை முன்வைத்தார்கள். பெய்ஜிங் மற்றொரு நாட்டில் இருக்கும் அரசைக் குறித்து அறியாத நிலையிலேயே இருப்பதை பல உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சீனாவின் விருப்பமான தைவான் மீதும், தனி நாடாகக் கோரும் திபெத் மற்றும் ஷின்ஜியாங் விவகாரத்திலும் சீனா தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிறது. அமெரிக்கா அல்லது மேற்கத்திய அரசுகளைப் போன்ற அரசாங்கங்கள் தன்னுடைய நிலத்திலேயே அமைவதை சீனா ஒருபோதும் விரும்பவில்லை.
சீனாவின் எந்தவொரு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியும் வெற்றிபெற்றதில்லை என்பதே கள நிலவரமாகும். இருப்பினும் சீனா இதை வேறுவிதத்தில் அணுகுகின்றது. நிலைமை நம்பிக்கையற்றதாகவோ அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் இல்லாததாகவோ இருக்கும்போது, அமெரிக்காவின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப வலிமை இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றது என்பதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதிக்கொள்கிறது.
இம்முரண்பாடான நிலைப்பாடு இஸ்லாமிய உலகில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் முடிவை ஆதரிக்கும் அமெரிக்காவை அநீதிக்கு துணைபோவதாகவும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக மத்தியஸ்தராகச் செயல்படுவதன் மூலம் சீனா தன்னை நியாயமான மற்றும் மோதல்களில் நேரடியாகச் சம்பந்தப்படாத ஒரு சக்தியாக முன்னிறுத்திக் கொள்கிறது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டில் ஈரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான தூதரக உறவு அமைந்ததைக் கூறலாம். அந்தச் சமயத்தில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவே இணக்கமான சூழலை இரு நாடுகளுக்கும் (ஈரான்-செளதி) இடையில் உருவாக்குவதற்கு உந்துசக்தியாக செயல்பட்டது என்பது வேறு விஷயம்.
சீனாவின் மத்தியஸ்தம் உத்திகள் மற்ற நாடுகளைப் போன்றே தோற்றம் அளிக்கும். பொருளாதார அழுத்தம், பண ஊக்கத்தொகைகள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் உத்திரவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும். ஆனால், அது நாடகத்தன்மையிலான முறையினையும் சில இடங்களில் நிகழ்த்துகின்றது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டு ஈரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கோண வடிவிலான சமமான மதிப்பை அளிக்கும் இருக்கை அமைப்பையும், அதே ஆண்டின் பிற்பகுதியில் நடந்த மற்றொரு நிகழ்வில் வட்டவடிவ இருக்கை அமைப்பையும் பயன்படுத்தியது. இம்மாதிரியான நிகழ்வுகள் மூலம் சீனா தன்னை ஒரு மத்தியஸ்தராக கருதுவதுடன், அப்பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நபராகவும் நுழைத்துக் கொள்ள விரும்புகின்றது.
கடந்த ஜீன் மாதம் குன்மிங்கில் நடைபெற்ற சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முக்கோண இருக்கை அமைப்பு பயன்படுத்தப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நுட்பமாக காண வேண்டியது யாதெனில், அமெரிக்கா மற்றும் இந்தியாவைவிட நம்பகத்தனமாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்திறனுடன் சாதிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கைத்தையும் கொண்டு இயங்குவதாகவே சீனாவின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
சார்புநிலைக் கொண்ட மத்தியஸ்தர்
மேற்கண்டவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சீனாவின் சார்புத்தன்மையை புறந்தள்ளிவிட முடியாது. இஸ்ரேல் – ஈரான் மோதலைப் பொறுத்தவரை சீனாவின் நிலைப்பாடானது, ”வலுப்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகவும்” சீனா கூறுகிறது. இருப்பினும் இஸ்ரேலிய அரசியல்வாதிகள் தைவான் உடனான உறவை ஆதரித்தால், ஈரானுடனான தனது உறவைப் பயன்படுத்தி இஸ்ரேலின் இருப்புக்கே அச்சுறத்தல் விடுக்க முடியும் என்று சீனா தன்னுடைய சமூக ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றது.
இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை. சீனா, மே மாதம் நடைபெற்ற இந்தோ-பாகிஸ்தான் மோதலில் வெளிப்படையாகவே பாகிஸ்தானை ஆதரித்ததை குறிப்பிட வேண்டும். இதற்கு முன்பாக நடந்த மோதல்களின் போதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சொல்லாட்சிக் கோரிக்கைகளில் இருந்து நகர்ந்துள்ளது. எவ்வாறாயினும் சீன அறிஞர்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பயன்படுத்தி ஆசியாவின் முக்கியமான அங்கத்தினர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர இவ்வமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் தொடர்பான மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் கூறுவது, மத்தியஸ்தம் என்பது சீனா வழங்கும் ஒரு பொதுநலச் சேவை அல்ல என்பதாகும். மாறாக சீனா தனது தேசியப் பாதுகாப்பு இலக்குகளை முன்னெடுப்பதற்கான ஒரு கருவி என்பதை உணர்த்துகின்றன.
Original: Jabin T. Jacob. 2025. ‘Above All, Look after Yourself: Conflict Mediation with Chinese Characteristics’. India’s World, Vol. 1, Issue 5, July-August.
Translated by Kalathi Veersami